நாகையில் தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி: கலெக்டர் நேரில ஆய்வு
ஆய்வு செய்த ஆட்சியர்
நாகப்பட்டினம் (தனி) 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், அனுப்பி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 29.நாகப்பட்டினம் (தனி) 2024 பாராளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், இன்று(18.04.2024) அனுப்பி வைத்தார். 29.நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. 04.06.2024 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது. 29.நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் 163.நாகப்பட்டினம், 164.கீழ்வேளுர் (தனி), 165.வேதாரண்யம் ஆகிய நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளும்,
166.திருத்துறைப்பூண்டி (தனி), 168.திருவாரூர் மற்றும் 169.நன்னிலம் ஆகிய தொகுதிகள் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளும் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச் சாவடிகளும், கீழ்வேளுர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 203 வாக்குச்சாவடிகளும்,
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 227 வாக்குச் சாவடிகளும், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச் சாவடிகளும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 1551 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு வரும் இயந்திரம் மற்றும் எழுது பொருட்கள், அடையாள மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு நாகப்பட்டினம், கீழ்வேளுர் (தனி), வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்.பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஹர்ஷ் சிங். மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.