தஞ்சாவூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தஞ்சாவூரிலிருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகள், பால் பவுடர்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், மளிகை பொருள்கள், போர்வைகள், சமையல் எண்ணெய்கள், மெழுகுவர்த்திகள், நாப்கின்கள் ஆகியவை மேயர் சண். ராமநாதன், ஆணையர் ஆர். மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இதேபோல, திருவையாறு அருகே வடுகக்குடியைச் சேர்ந்த வாழை விவசாயி எம். மதியழகன் ஏறத்தாழ 20 ஆயிரம் எண்ணிக்கையில் 2 டன் வாழைப் பழங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் ஒப்படைத்தார். மாவட்ட நிர்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வரை ஏறத்தாழ ரூ. 10 லட்சம் அளவுக்கு நிவாரணப் பொருள்கள் வந்தன. இவற்றில் முதல் கட்டமாக ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரியை மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் அனுப்பி வைத்தார்.

சேதுபாவாசத்திரம் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அனைத்து நிலை அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்காக முதல் கட்டமாக, அரிசி, மளிகை, ஜவுளி, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 400 மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். பேராவூரணி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, அரிசி, கோதுமை, சேமியா, மளிகைப் பொருட்கள், ஜீனி, போர்வை உள்ளிட்ட ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 389 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில், வட்டாட்சியர் (பொ) சாந்தகுமார், குமரப்பா பள்ளி பொருளாளர் அஸ்வின் கணபதி, துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story