டெண்டர் எடுப்பதில் தகராறு - ஆளும் கட்சியினர் அராஜகம்

டெண்டர் எடுக்க போட்டா போட்டி
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சார்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் 60க்கும் மேற்பட்ட புதிய பணிகளுக்கான டெண்டர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது . இதில் ஒப்பந்தப்புள்ளி கோரும் விண்ணப்பங்களை போடுவதற்கான பெட்டியை வைக்காமல் ஆளும் கட்சியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு வேறு ஒப்பந்ததாரர்கள் யாரும் கலந்து கொண்டால் அவர்களைக் ரௌடிகளை வைத்து மிரட்டல் விடுத்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தரப்பினருக்கும் ஒப்பந்தம் எடுக்க வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கு இருந்த காவல்துறையினர் இருதரப்பை சேர்ந்தவர்களையும் சமாதானம் செய்தனர். அதன் பின்னர் விண்ணப்பங்களை வழங்க பெயரளவிற்கு சீல் வைக்கப்படாத பெட்டியை அதிகாரிகள் அங்கு வைத்தனர். இதுபோன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எந்த ஒரு ஒப்பந்த புள்ளி நடைபெற்றாலும் இது போன்றே சிண்டிகேட் அமைத்து முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறும் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
