இடையூறாக தி.மு.க கொடிக்கம்பம் - பயணிகள் அவதி
இடையூறாக வைக்கப்பட்டுள்ள தி.மு.க கொடிக்கம்பம்
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், அரசியல் கட்சி சின்னங்கள், கட்சி கொடி, தலைவர்கள் சிலை, படங்கள் மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி, வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த, 50 அடி, தி.மு.க., கொடிக்கம்பத்தை வருவாய் துறையினர் அகற்றினர்.
இந்த நிலையில், அகற்றபட்ட ராட்சத கொடிக்கம்பம், வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிழற்குடை முன், பயணியருக்கு இடையூறாக வைக்கப் பட்டுள்ளது. கொடிக்கம்பத்தை தாண்டி நிழற்குடைக்கு செல்லும் பயணியர், பேருந்து வரும் போது, வேகமாக பேருந்து ஏற செல்லும் போது, கொடிக்கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதி, கால் தடுக்கி விழும் சூழல் உள்ளது. இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, பேருந்து நிறுத்தத்தின் எதிரே, வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கட்சி கொடிக்கம்பத்தை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்."