நூறு வேலை சீர்குலைப்பு - மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ. லாசர் தெரிவித்தது: விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானம் குறைந்துவிட்ட நிலையில், நூறு நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. ஆனால், 2014 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகக் குறைத்துவிட்டது. இதனால், ரூ. 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிலையில், ஏறத்தாழ ரூ. 70 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது ஆறில் ஒரு பங்கு தொகை மட்டும் ஒதுக்கீடு செய்து, நூறு நாள்களுக்கு பதிலாக 10 முதல் 40 நாள்கள் மட்டுமே வேலை வழங்குகிறது. இத்திட்டத்தில் அட்டை பெற்றுள்ள 25 கோடி பயனாளிகளில் 11 கோடி பேருக்கு வேலை வழங்காமலேயே நீக்கிவிட்டது. ஆதார் எண் இணைக்கப்பட்ட வேலை அட்டைகளாக மாற்றி ஊதிய பரிவர்த்தனை செய்கிறோம் எனக் கூறி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் அதையும் நிறுத்திவிட்டது.
உரிய உதவிகளை வழங்கி அனைத்து வேலை அட்டைதாரர்களையும் பதிவு செய்வதற்கு பதிலாக, பாதியோடு முடித்து மேலும் 7 கோடி பேரை நீக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இத்திட்டத்திலிருந்து பல லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நிதி ஒதுக்கீட்டை குறைத்து வழங்கியதால், வேலை செய்து 3 அல்லது 4 மாதங்களாக ஊதியம் கிடைக்காததால் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஜனவரி 30 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் லாசர். இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை, மாநிலப் பொதுச் செயலர் வி. அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.