நீலகிரி மாவட்டத்தில் 12டி படிவங்கள் விநியோகம் தீவிரம்

12d படிவங்கள் வழங்கல்
இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொதுதேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்து அனுப்புதல், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன்றன. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் நேரில் வந்து வாக்களிக்க முடியாத மாற்று திறனாளிகளுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தபால் ஓட்டுக்கான 12டி விண்ணப்பங்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி கடநாடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அருணா முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் ஓட்டு விண்ணப்பங்களை வழங்கினார். மேலும் அப்போது வாக்காளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவினாசி, ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 13,073 வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 10,077 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3225, மாற்றுத்திறனாளிகள் 3815 என 7040 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டு விண்ணப்பங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அடுத்த 2 நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்ய அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
