மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண தொகை செங்கை ரேஷன் கடைகளில் வினியோகம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண தொகை செங்கை ரேஷன் கடைகளில் வினியோகம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண தொகை செங்கை ரேஷன் கடைகளில் வினியோகம்
நேற்று முதல் டோக்கன் வழங்கியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில், மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசின் 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று நடந்தது. அதற்கு முன், நெரிசலை தவிர்க்கும் நோக்கில், பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர்.. டோக்கன் பெற்ற பயனாளிகள், அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, 6,000 ரூபாய் நிவாரணத் தொகை பெற்றனர். நகராட்சியின் 19வது வார்டுக்கு உட்பட்ட ராஜிவ் காந்தி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், நிவாரண தொகை பெற, அதிகாலை முதலே பயணியர் காத்திருந்தனர். காலை 10:30 மணிக்கு, நகராட்சி தலைவர் கார்த்திக், துணைத் தலைவர் லோகநாதன் ஆகியோர், பயனாளிகளுக்கு நிவாரண தொகையை வழங்கினர். கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ரேஷன் கடை மூலம் நிவாரண தொகை வழங்கப்பட்டது. திருப்போரூர் வட்டத்தில், மிக்ஜாம் புயல் மழை பாதிப்புக்கு உள்ளான தையூர், கேளம்பாக்கம், படூர் ஆகிய மூன்று கிராமங்களில், தகுதி வாய்ந்த 7,855 பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உட்பட, மற்றவர்கள் புயல் மழையில் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் வினியோகிக் கப்பட்டவர்களுக்கு, நேற்று காலை முதல் நிவாரண தொகை வழங்கும் பணி துவங்கியது.

Tags

Next Story