தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு வினியோகம்
தள்ளுவண்ரி கடை
காஞ்சிபுரம் நகரில் காமராஜர் சாலை, காந்திரோடு, செங்கழுநீரோடை வீதி ஆகிய சாலைகளில் சாலையோர தள்ளுவண்டிகளில் பலரும் உணவகங்கள் நடத்தி வருகின்றனர். இந்த உணவகங்கள் சைவம், அசைவம் என, இரு வகையான உணவுகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்யும் உணவுகள் பலவும் சுகாதாரமின்றி செய்வதாக நகரவாசிகள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகள் பலவும், வெறும் கைகளால் அசைவ உணவுகளை எடுத்து பரிமாறுவதும், சமைப்பது போன்ற சுகாதாரமற்ற முறையில் உணவு பரிமாறுவதால், வயிறு உபாதை ஏற்படுவதோடு, பல்வேறு சிக்கலுக்கு ஆளாவதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். பல நாட்கள் பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்துவது, அதிக நாள் புளித்த மாவு பயன்படுத்துவது என, சுத்தமின்றி உணவு தயாரிக்கும் தள்ளுவண்டி கடைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சரிவர கண்காணிக்காததால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சுகாதாரமற்ற உணவு தயாரிக்கும் கடைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.