விராலிமலையில் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம்!
பூத் சிலிப்
விராலிமலையில் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் தொடங்கியுள்ளது.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி திங்கட்கிழமை தொடங்கியது. வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் இந்தச் சீட்டில் வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி அலுவலரின் பெயர், கைப்பேசி எண்போன்ற பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாக்காளரின் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பூத் சிலிப்பின் முன் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் வாக்குப்பதிவு தேதி, வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்களுடன் க்யூ ஆர் குறியீடு இடம்பெற்றுள்ளது.தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இணையதள புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், மாவட்ட அளவில் உதவி எண் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. கருர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 289 வாக்காளர்களில் 12-டி படிவம் பெற்றவர்கள்(தபால் வாக்கு, மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கும் மேற்பட்டோர்)இருப்பிடத்தில் இருந்தே வாக்களிப்பதால் இவர்களை தவிர மற்ற அனைவருக்கும் வரும் 13 ஆம் தேதிக்குள் பூத் சிலிப் வழங்கப்பட உள்ளதாக தேர்தல் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story