காஞ்சியில் 318 பயனாளிகளுக்கு ரூ.1கோடி நல உதவிகள் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கலெக்டர் வளாக கூட்டரங்கில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் அன்பரசன், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, ஏழு பயனாளிகளுக்கு 3.15 லட்ச ரூபாய் மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 10 பேருக்கு 8.35 லட்சம் மதிப்பில் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களும், 62 பயனளிகளுக்கு, 8.37 லட்சம் மதிப்பில் மொபைல் போன்களும் என, 92 பயனாளிகளுக்கு, 21.62 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண திட்டம் உள்ளிட்ட திருமண திட்டங்களின் கீழ், 183 பயனாளிகளுக்கு, அமைச்சர் அன்பரசன் 76.5 லட்ச ரூபாய் மதிப்பில், தலா 8 கிராம் தங்கம் வழங்கினார்.
மேலும், 20 திருநங்கையருக்கு சுயதொழில் மானியமாக, 10 லட்ச ரூபாய், 20 பேருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டன. கல்வி, கலை, விளையாட்டில் சிறந்து விளங்கிய 10 பள்ளி மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் என, மொத்தம் 226 பயனாளிகளுக்கு, 86.5 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
இரு நிகழ்ச்சியிலும், 1.08 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி, பயிற்சி கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.