பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

பேருந்து ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

ஆட்சியர் உமா 

அனுமதிக்கப்பட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஆட்டையாம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனத்தின் பஸ் லைசென்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவில் அனைத்து பஸ்களும் நின்று செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ராசிபுரம் அருகே சேலம் மெயின் ரோட்டில் உள்ள, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்வதில்லை என பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில், போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை மூலம் கூட்டாய்வு செய்யப்பட்டது.

ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில், தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் இரண்டு பக்கத்திலும் மிக அகலமாகவும், நிழற்குடை அமைக்கப்பட்டு விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மூலம், அமைக்கப்பட்ட மசக்காளிப்பட்டி பஸ் ஸ்டாப்பினை ரத்து செய்து, ஆட்டையாம்பட்டி பிரிவில் பஸ் ஸ்டாப் அறிவித்து, மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாப்பில், அனுமதிக்கப்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர பஸ்கள், ஆட்டையாம்பட்டி பிரிவு மேம்பாலம் வழியாக செல்லாமல், ஆட்டையாம்பட்டி பிரிவு சர்வீஸ் ரோடு வழியாக சென்று, ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனத்தின் பஸ் லைசென்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story