மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை
மாவட்ட ஆட்சியர் அறிவுரை
திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் 100% உயர்கல்வி செல்வதற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேசியதாவது , திருப்பூர் மாவட்டத்தில் உயர் கல்வி வழிகாட்டுதல் குறித்து கண்காணிப்பு குழு , உயர் கல்வி குழு போன்ற பல்வேறு குழுக்கள் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி சார்ந்த அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்தின் வழிகாட்டும் அலுவலர்கள் உயர் கல்வி வழிகாட்டுதலுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 23,500 மாணவர்களும் உயர்கல்விக்கு செல்ல வேண்டும்.
இலக்கு பெரியதாக இருந்தாலும் அதற்கான அனைத்து வழிகாட்டுதலையும் அனைத்து அலுவலர்களும் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன உதவிகள் தேவை என்பதை தெரிவித்தால் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.
மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லாமல் இருப்பதற்கு நிதிப்பற்றாக்குறை , குடும்ப சூழல் , உயர்கல்வி படிப்பில் ஆர்வமின்மை , தொழில் செய்தல் , பெற்றோர்களின் அனுமதியின்மை மற்றும் அருகாமையில் கல்லூரியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணங்களாக அமைகின்றன.
அதற்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி 100 சதவீதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை பெற்று உயர் கல்வி கற்க வேண்டும் என பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் , மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பக்தவச்சலம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.