நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நரிக்குடி  ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு
ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் படி நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் ஊராட்சி சீலம்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும், வேலானூரணி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.95 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருவதையும்,

ஆனைக்குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். ஆனைக்குளம் கிராமத்தில்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மாணவர்களால் செய்யப்பட்டுள்ள கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.

பின்னர், அருப்புக்கோட்டை நகராட்சி காந்தி நகரில் செயல்படும் புறநகர் பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவதற்கு சம்மந்தபட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவுறுத்தினார்.

Tags

Next Story