புதிய கனரக வாகனங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
கனரக வாகனங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்கள் திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் சார்ந்த இயந்திரங்கள் வாகனங்கள் வாங்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக இன்று அருப்புக்கோட்டை சரகத்தில் செயல்படும் வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இத்திட்டத்தின் இரண்டு கனரக (Lorry) வாகனங்கள் பொது விநியோகத்திட்ட நகர்வுப் பணிக்கு பயன்படுத்தும் பொருட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 1957 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1839 அ-வகுப்பு உறுப்பினர்களுடன், 2021-2022 ஆம் தணிக்கைப்படி ரூ.31.23 இலட்சம் நிகர லாபத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு உரிய நிதியுதவியானது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியில், நபார்டு வங்கியால் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 4 சதவிகித வட்டிவீதத்தில் அதில் 3 சதவிகித மானியமாக, சங்கத்திற்கு 1 சதவிகித வட்டிக்கு கடன் ஒப்புதல் வழங்கப்பட்டு, இரண்டு கனரக (Lorry) வாகனங்கள் தலா ரூ.26 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.52 இலட்சம் மதிப்பில் சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாகனங்கள் வட்டார போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டு வாகன எண்கள் TN 67 BQ 5454, மற்றும் TN 67 BQ 5478 பெறப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மொத்த கொள்ளளவு 10.527 டன் ஆகும். இவ்வாகனங்களை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிவுரைகளின்படி, பொதுவிநியோகத் திட்டத்தின் நகர்வுப்பணியில் தனியார் வாகனங்களை தவிர்க்கும்பொருட்டு இச்சங்கம் மூலம் நகர்வுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலையுடன் இச்சங்கமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சிவகாசி பகுதிகளில் பொதுவிநியோகத்திட்ட நகர்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் இச்சங்கத்திற்கு சராசரியாக வாகனம் ஒன்றிற்கு மாதம் ரூ.25,000/- வீதம் மொத்தமாக ரூ.50,000/- வருமானம் ஈட்டவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.