பள்ளி மேலாண்மை ஆலோசனை குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளி மேலாண்மை ஆலோசனை குழுவினருடன் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு
பள்ளி மேலாண்மை ஆலோசனைக்குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில், சென்னையிலிருந்து வருகை தந்த பள்ளி மேலாண்மை ஆலோசனைக் குழுவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பள்ளி மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதி, கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மேம்படுத்துதல் மூலம், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காக இந்த பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மத்திய சேனை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, திருத்தங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு சென்னையிலிருந்து வருகை தந்த பள்ளி மேலாண்மை ஆலோசனைக்குழுவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நிவர்த்தி செய்யப்பட்ட குறைகள், நிலுவையில் உள்ள குறைகள் அதற்கான காரணங்கள் உள்ளிட்டவைகளை தலைமையாசிரியர்கள், மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர். மேலும், இந்த குழுவின் செயல்பாடுகளை மற்ற அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story