குறைகளை சொன்ன இலங்கைத் தமிழ் மக்கள் - உத்தரவிட்ட ஆட்சியர் உமா
சேந்தமங்கலம் வட்டம், எருமபட்டி பேரூராட்சியில், மறுவாழ்வுத் துறை சார்பில் செயல்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 32 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் 18 குடும்பங்களை சேர்ந்த 66 நபர்கள் 18 குடியிருப்புகளில் வசித்து வருகின்றார்கள்.இம்முகாமில் 8 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை என முகாம் வாழ் மக்கள் தெரிவித்ததின் பேரில், அடிப்படை வசதி இல்லாத பொதுமக்கள் இருக்கக் கூடாது என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணத்திற்கு ஏற்ப பணியாற்றும் வகையில் மின்சார வாரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உமா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடனடியாக மின்சார வசதி ஏற்படுத்திடுமாறு உத்தரவிட்டார்.
இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாமில், முகாம் வாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான குடிநீர்,மின்சாரம், ஆண், பெண் என தனித்தனி பொதுக்கழிப்பிடம், கழிவு நீர் கால்வாய் வசதிகள் உள்ளன. இருந்த போதிலும் கூடுதலாக மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் தனி நபர் கழிப்பிடம் தேவைப்படும் நபர்களுக்கு இட வசதிக்கு ஏற்ப கட்டித்தரவும், மேல்நிலை அல்லது கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும் எருமப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முகாம் வாழ் மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.