தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடி  மாவட்டத்தில் கல்விக் கட்டணம் கேட்டு மாணவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ம் தேதி பெய்த அதிகனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலானோரின் தொழில்கள் முடங்கியுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் அரசு மற்றும் தனியார் வழங்கும் நிவாரண பொருட்கள் மூலம் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மூன்றாம் பருவ கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளுக்கு 3ஆம் பருவ நோட்டு, புத்தகங்கள் வழங்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் கேட்டபோது, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கட்டணம் கேட்டு மாணவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் பள்ளிகள் மீது முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story