270 மாணவர்களுக்கு 150 முட்டைதானா?
ஏலகிரி மலை அரசுப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சத்துணவு ஊழியர்களை சாடினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 ஆவது புதிய ஆட்சியராக தர்ப்பகராஜ் கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து இன்று ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அரசு பள்ளியில் 270 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், 150 மாணவர்களுக்கு மட்டுமே சத்துணவு ஊழியர்கள் முட்டை சமைத்திருப்பதை அறிந்த ஆட்சியர் சத்துணவு ஊழியர்களை கடுமையாக கடிந்தார். கோபமடைந்த ஆட்சியர் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும் படி கூறினார்.
அதனை தொடர்ந்து அத்தனாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டு பிரசவம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய பெண்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை செய்கின்றார்களா என தாய்மார்களிடம் கேட்டுக்கொண்டார்.