மாவட்ட பஞ்சாயத்து தலைவியின் கணவர் திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்
சுபாஷ் சந்திரபோஸ்
தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் சிவகிரி சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே ராயகிரி வடுகபட்டி வழியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 52), லாசர் (58) ஆகியோர் வந்த காரில் சோதனை செய்தனர். அதில் 450 கிலோ குட்கா இருந்தது. சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் வந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் லாசரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர். கைதான சுபாஷ் சந்திரபோஸ் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். அவருடைய மனைவி தமிழ்செல்வி தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். இவர்கள் இருவரும் தி.மு.க. பிரமுகர்கள் ஆவர். சுபாஷ் சந்திரபோஸ் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு தி.மு.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.