தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் - அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆய்வு
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாடு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளான்று துர்கையம்மன் உற்சவமும், இரண்டாம் நாளன்று பிடாரியம்மன் உற்சவமும், மூன்றாம் நாளன்று விநாயகர் உற்சவமும் நடைபெறும். எனவே, தீபத்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழாவில் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்து புதுப்பொலிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பஞ்ச ரதங்களும் தற்போது முழுமையாக சீரமைக்கப்படுகிறது. இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த 3வது கட்ட ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், எஸ்பி கார்த்திகேயன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் ரிஷப், ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, கோட்டாட்சியர் மந்தாகினி,கோயில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தற்காலிக பஸ் நிலையங்களை அமைத்தல், சிறப்பு பஸ்கள் இயக்கம், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுவரை எப்போதும் இல்லாத வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தனி கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். குறிப்பாக, தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்தல், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அதோடு, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்து, கள ஆய்வு நடத்தப்படும் என்றார்.