திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - நடிகை கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி
கோவை: சித்தாபுதூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் " மீண்டும் மோடி வேண்டும் மோடி" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த நடிகை கஸ்தூரி, பொதுகூட்டம் நிறைவடையும் நிலையில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பது உண்மைதான் என தெரிவித்தார். திமுகவை எதிர்க்கும் அளவிற்கு எதிர்கட்சி என யாரும் இல்லை எனவும், அதனால் திமுக எதிர்ப்பு ஒட்டுகள் சிதறி இருப்பதாகவும், சரியான எதிர்கட்சியாக யார் வரப்போகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் தேர்தலாகவே இது இருக்கும் என தெரிவித்தார்.
இது திமுகவை தோற்கடிக்கும் தேர்தல் அல்ல, திமுகவிற்கு அடுத்து யார் இருக்கின்றார்கள் என்பதற்கு பதிலாகவே இந்த தேர்தல் இருக்கும் எனவும் தெரிவித்தார். நடிகை கஸ்தூரிக்கு இந்த கருத்தை தெரிவித்தவுடன் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து சென்றார். இதனைதொடர்ந்து பேசிய நடிகை, கஸ்தூரி எதிர்க்கட்சி வலுவாக இல்லாத காரணத்தால் திமுக விற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதிமுக மற்றும் பாஜக ஒன்றாக இல்லை ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று திமுக கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கூட்டத்தில் பங்கேற்ற நீங்கள் திமுக விற்கு சாதகமாக பேசுகிறீர்களே என எழுப்பபட்ட கேள்விக்கு உண்மையை தானே சொன்னேன், நான் பாஜக உறுப்பினர் இல்லை என்றும் ஒரு வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே என கூறியதுடன், பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றும் தனது வாக்கு பாஜகவிற்கு தான் என்றும் தெரிவித்தார். மேலும் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது தொடர்பான கேள்விக்கு, தங்கள் கட்சி வெற்றி பெறும் என கூறுவது இயல்பான ஒன்றுதான் என்றார்.
இதேபோல் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அவர்கள் பணி. பொது கருத்துக்களை நடிகர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி, அதிலிருந்து தான் மாறுபட்டிருப்பதாகவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் அதில் நடிகர் நடிகை விதிவிலக்கல்ல என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு, தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கூறியதுடன் ஒரு உறுதிப்பாட்டுடன் நடிகர் விஜய் செயல்பட வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்தார். மீண்டும் வேண்டும் மோடி பொது கூட்ட நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.