எமர்ஜென்சி அறிவித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியா? - வி.பி துரைசாமி விளாசல்

எமர்ஜென்சி அறிவித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியா? - வி.பி துரைசாமி விளாசல்
நெருக்கடிகளை எதிர்த்தது திமுகவும் பாஜகவும்தான். ஆனால் நெருக்கடி நிலையை கொண்டு வந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

நாட்டில் காங்கிரஸ் அரசால் கடந்த 1975-ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டதை கருப்பு தினமாக பாஜக அனுசரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் மாவட்டப் பார்வையாளருமான V.P. துரைசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது..... கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நமது நாட்டில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது.அவர் தேர்தலில் நின்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை ஏற்காமல், ஜனநாயக நாடான இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். இதனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன், திருபுல்லாணி, பெர்னாண்டஸ் போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பு தேடி தமிழகத்திற்கு வந்தார்கள். அன்றைய முதல்வர் கருணாநிதி நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தார்.

எழுத்துரிமை, பேச்சுரிமை போய்விட்டது., சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது., என்று பாஜக நெருக்கடி நிலையை கடுமையாக விமர்சித்து எதிர்த்தது. அத்தோடு பல 100 உயிர்களையும் பாஜக தியாகம் செய்தது. அதேபோல திமுகவில் இராஜாங்கம், சிட்டிபாபு போன்றவர்கள் நெருக்கடி நிலைக்கு ஆளாகி சித்திரவதைபட்டு உயிரிழந்தனர். இதுபோன்ற பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்தனர். தேர்தல் நேரத்தில் பிஜேபி சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக ராகுல் காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். நெருக்கடிகளை எதிர்த்தது திமுகவும் பாஜகவும்தான். ஆனால் நெருக்கடி நிலையை கொண்டு வந்த காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இதில் யார் சர்வாதிகாரப் போக்கை ஆதரிக்கிறார்கள்? கொள்கை, கோட்பாடு, ஜனநாயக மரபுகளை மீறி காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி வைத்திருப்பது பொருந்தாது.

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பதவி பிரமாணத்தின் போது, கூக்குரல், கூச்சல் எழுப்பி ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் சரியானது அல்ல. நீட் பிரச்னை, கள்ளக்குறிச்சி விஷ சாராய பிரச்னை என்று எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது, எதிர்க்கட்சியினர் சபை நாகரிகத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் சொல்வதை அமல்படுத்த தயாராக உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி விட்டார்.

நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து சிபிஐ விசாரணையும், உச்சநீதிமன்றத்தில் விசாரணையும் உள்ளது. இது இரண்டு அமைப்புகளும் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு மத்திய அரசு நடைமுறைப்படுத்தும். இது குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரை, நீட் தேர்வு நடத்துவதற்கான ஆணை வழங்கியது உச்ச நீதிமன்றம் ஆகும். அதில் மாற்றம் ஏதாவது செய்ய விரும்பினால், தமிழ்நாடு அரசு, நீதிபதி இராஜனிடம் கேட்டுக் கொள்ளலாம். மாநில அரசு, சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால்தான் இதுகுறித்த தெளிவு பிறக்கும். எனவே திமுக அரசு நாட வேண்டிய இடம் உச்ச நீதிமன்றம் ஆகும். இதை மக்கள் மற்றும் மாணவர்களின் பிரச்சனையாக உருவாக்கி, அரசியல் ஆதாயத்தை பெறவே இவ்வாறு திமுக செயல்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவு பட்டியல் இனத்தவர்கள், மலைவாழ் மக்கள் மருத்துவ படிப்புக்கு செல்கின்றனர்.

நீட் தேர்வு இல்லை என்றால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. திமுகவினர் தான் அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு இருந்தால் அவர்களால் சம்பாதிக்க முடியாது என்ற காரணத்தினால் தான் அவர்களும் அவர்களது அரசும் நீட்டு தேர்வை எதிர்த்து வருகின்றனர். அரசியல் ஆதாயம் பெறவே நீட் எதிர்ப்பு என்ற விஷயத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளனர். முதுநிலை மருத்துவர் நுழைவு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான தேர்வு நடக்கும்.இந்தியாவில் பல சான்றோர்கள் அரசியல் சாசனத்தை அளித்துள்ளார்கள்.

ஆங்கிலேயர்கள் எழுதப்படாத சட்டத்தை வைத்து ஆட்சி செய்தார்கள். நாம் எழுதப்பட்ட சட்டத்தை வைத்து ஜனநாயக ஆட்சி செய்கின்றோம். அப்படி இருந்தும் நெருக்கடி நிலையை அறிவித்தவர் இந்திராகாந்தி அம்மையார். அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியோடு நாங்கள்தான் ஜனநாயகவாதி சமூக நீதி கடைபிடிப்பவர்கள் திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொண்டு முதலமைச்சர் காங்கிரசுடன் எப்படி உங்களால் ஒத்துப் போக முடிகிறது. இதைத்தான் நாட்டு மக்களும் புரிந்து கொண்டு உள்ளார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக இந்தக் கருப்பு தினத்தை கடைபிடிக்கிறது. தமிழகத்தின் வனம், மண் போன்ற வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கின்றபோது, பொதுமக்கள் ஊடகங்கள் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதைப் போலத்தான், மத்திய அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை போன்றவை தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்து கொண்டு செயல்படுகிறது. அவற்றின் செயல்பாடுகளில் மத்திய பாஜக அரசு தலையிடுவதில்லை.

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் பாஜக சிபிஐ விசாரணை கோருகிறது. விஷ சாராய பாதிப்பில் 60 குடும்பத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் ஆகும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதியே மத்திய அரசு இதனை உற்று நோக்குகிறது. திமுக நிர்வாகி ஆர். எஸ். பாரதி பொறுப்பற்ற முறையில் பேசுவதை பாஜக சார்பில் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். 60 பேர் உயிரிழந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளதை கடுமையாக எதிர்க்கின்றோம். அவர் மீது மான நஷ்ட வழக்கு போடுவதற்கு சட்ட நிபுணர்களோடு கலந்து பேசி வருகிறோம்.

வருடம் தோறும் பாஜக ஜூன் 25-ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. பாராளுமன்றம், சட்டமன்றம், மக்கள் மன்றத்திலும் இந்த கருப்பு தினத்தை குறித்து பேசி வருகிறோம். எமர்ஜென்சி காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பாஜக, திமுக ஆகும். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் எமர்ஜென்சிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. எமர்ஜென்சி எதிர்த்து போராடியது சிறை சென்றது, உயிர் தியாகம் செய்தது பாஜக ஆகும். எனவே இதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பாஜகவுக்கு உள்ளது. எமர்ஜென்சி இன் பாதிப்பு குறித்து பல கூட்டங்களில் பிரதமர், பாஜக முன்னணி தலைவர்கள் பேசி வருகிறோம்.

50 ஆண்டுகள் ஆனாலும் பல உயிர்கள் எமர்ஜென்சியால் இழந்துள்ளனர். எழுத்துரிமை, பேச்சுரிமை ஆகியவற்றை நசுக்கி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செயல்பட்டது இன்று வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எமர்ஜென்சியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக ஏதாவது இப்போது உதவிகள் செய்யுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த V.P.துரைசாமி அதற்கு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட வேண்டும் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P. சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் M. இராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட மாவட்ட பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார்,ரவி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story