கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக முடிவு 

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட தஞ்சை தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு மறைவு விழாவை சிறப்பாக கொண்டாட தஞ்சை தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும் பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினரும் பேராவூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை வரும் ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி, தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கிளைகள், வட்டங்கள் தோறும் கட்சிக்கொடி ஏற்றி, அறுசுவை உணவு வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்குதல், ஆதரவற்ற இல்லங்களில் உணவு வழங்குதல் என சிறப்பாக கொண்டாடுவது, திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்து நான்காமாண்டு தொடங்குகின்ற சூழலில் திராவிட சித்தாந்தத்தை ஓங்கி ஒலிப்பதோடு சமூகநீதி பாதுகாவலராக விளங்கும் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் இரவு பகல் பாராது சூறாவளி சுற்றுப் பயணம் செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக, குறிப்பாக தஞ்சை தொகுதி வேட்பாளர் முரசொலி வெற்றிக்கு உழைத்த கழக தலைவர் மு.க. ஸ்டாலின், தனித்துவமான தேர்தல் பரப்புரை மூலம் மக்கள் மத்தியில், மக்கள் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை விளக்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்ட இளைஞரணி தலைவர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி வெற்றிக்கு பாடுபட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பாராளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள், கிளைக் கழக, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் மற்றும் அயராது உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story