திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு நிறைவு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு நிறைவு
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அக்குழுவின் உறுப்பினரும், திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புத் தலைவருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.


மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், டி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் தில்லி சிறப்பு பிரதிநிதியும், திமுக விவசாய அணிச் செயலருமான ஏ.கே.எஸ். விஜயன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்று ஏராளமானோரிடம் மனுக்களைப் பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் தெரிவித்தது: திமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடமே கேட்டு, அவர்களுடைய தேவையை அறிந்தோம். இந்த மனுக்கள் பெறுதல் சுற்றுப்பயண நிகழ்வு நிறைவடைகிறது. இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முதல் கூடி மனுக்களை பரிசீலித்து, தேர்தல் அறிக்கையில் இணைப்போம். வழக்கம்போல திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும்.

பெரும்பாலான மனுக்கள் ரயில், விமானப் போக்குவரத்து, ஜிஎஸ்டியால் வணிகர்கள் சந்திக்கும் சிரமங்கள், கால்வாய்கள், ஆறு, குளங்கள் தூர் வாருதல் உள்ளிட்ட உள்ளூர் பிரச்னைகளை மையப்படுத்தி அதிகமான மனுக்கள் வந்துள்ளன. மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என்பதுதான் இத்தேர்தலின் முக்கியமான கருப்பொருளாக இருக்கும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு குறைவான பங்களிப்பு செய்வது வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இது.

எனவே, ஜிஎஸ்டி விதிப்பில் சரியான திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட மாநிலக் கட்சி திமுகதான். வேறு எந்தக் கட்சியும் இல்லாத அளவுக்கு திமுக தொடங்கி 75 ஆம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த 75 ஆண்டுகளாக திமுகவை ஒழித்துவிடுவோம் என நூற்றுக்கணக்கானோர் கூறிவிட்டனர். நாங்கள்தான் இருக்கிறோம்; மற்றவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர்.

இந்திய மக்களை பிரதமர் ஏமாற்றி வருகிறார் என்பதற்கு மிகப் பெரிய பட்டியலை எங்களால் சொல்ல முடியும். அவர் கூறிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்றார் இளங்கோவன். இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், பூண்டி கே. கலைவாணன், கா. அண்ணாதுரை, என். அசோக்குமார், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story