நவ 27ல் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளித்த தி.மு.க.,வினர்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 27ம் தேதி சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வட்டாரங்களிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பிறந்த 16 குழந்தைகளுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தங்க மோதிரமும், தலா 5 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையையும் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், எடப்பாடி அரசு மருத்துவமனையிலும் நவம்பர் 27ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும், தலா 5 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையையும் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து எடப்பாடி நகரத்திற்கு டி.எம்.செல்வகணபதி வருகை புரிந்த போது நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி சேலம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிகளிள்ள அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் 27ஆம் தேதியான அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் தலா 5 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதிக்கான காசோலையையும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் 30 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க போவதாகவும், எந்த ஒரு இயக்கத்திலும் இல்லாத மாநாடாக இந்த திமுக இளைஞரணி மாநாடு நடைபெறும் எனவும் பேட்டி அளித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மேற்கு மாவட்ட திமுக அவை தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், சுந்தரம், எடப்பாடி நகர்மன்ற தலைவர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் மகுடஞ்சாவடி பச்சமுத்து, எடப்பாடி நல்லதம்பி, கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.