திமுக பொதுக்கூட்டம் - கட்சியினருக்கு மா.செ அழைப்பு
ராஜேந்திரன் எம்.எல்.ஏ
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார். இதில் அவர், கடந்த 10 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல், நிர்வாக சீர்கேடு, மக்கள் விரோத சட்டங்கள், நடவடிக்கை குறித்தும், இதற்கெல்லாம் துணை போன அ.தி.மு.க. அரசு குறித்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கிறார். எனவே இந்த கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூர், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். மேலும் அவர்கள் வாகனங்கள் விடுவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநகர செயலாளர் ரகுபதி உடன் இருந்தார்.