வரி சுமைகளை திணித்து வருகிறது திமுக அரசு - பாலகிருஷ்ண ரெட்டி

திமுக அரசு வரி சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறது, மின்சார கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரி, பால் விலை, மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்தார்.

ஓசூர் அருகே உள்ள பாகலூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ரவிக்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழக முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பாலகிருஷ்ண ரெட்டி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் இருக்கும்போது 10 ஆண்டுகள் வரியே இல்லாத பட்ஜெட் போட்டு ஆட்சி நடத்தினார்கள். ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்வி கடன்களை ரத்து செய்கிறோம், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குகிறோம், எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குகிறோம், விவசாய கடன்களை ரத்து செய்கிறோம், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறோம் என பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்கள், ஆட்சிக்கும் வந்தார்கள், ஆட்சிக்கு வந்தபின் அம்மா அவர்கள் மக்களுக்கு கொடுத்த திட்டங்களை நீக்கி விட்டார்கள். தற்போது அம்மா அரசில் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம், கால்நடைகள் வழங்குதல் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், உள்ளிட்ட மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, ஆனால் வரி சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள், மின்சார கட்டணம், தண்ணீர் வரி, சொத்து வரி, பால் விலை, மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒரு குடும்பத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகமாக செலவாகி வருகிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பேசினார்.

Tags

Next Story