கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு திமுக அரசே காரணம் - இபிஎஸ்
செய்தியாளர் சந்திப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திந்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். பதிலுரையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து பேசினார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்காக அறவழியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பிறகும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் சிபிசிஐடிதான் விசாரிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த வழக்கை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது என்பதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதனை ஏற்காத முதலமைச்சர் சாத்தான்குளம் விவகாரத்தில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார். சாத்தான்குளம் விவகாரத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற மதுரைக்கிளை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டபோதும், விசாரணை முடித்து கொலை வழக்கு பதிவு செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த 16 நாட்களுக்குள் சிபிஐ விசாரணைக்கு அதிமுக அரசு உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசின் அழுத்தம் காரணமாக தவறான தகவலை மாவட்ட ஆட்சியர் கூறியதால், இத்தனை உயிரிழப்புகள் நேர்ந்த்தாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.