இன்பநிதி பாசறை அமைத்த நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்

புதுக்கோட்டையில் இன்பநிதி பாசறை அமைப்பதாக போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்.

புதுக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிக்கு பாசறை தொடங்கியதால் திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திமுக தலைமை நீக்கியதை தொடர்ந்து நேற்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் விராலிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக மீனவர் அணி துணை அமைப்பாளராக இருந்த திருமுருகன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலை இலக்கியப் பிரிவு இணை அமைப்பாளராக இருந்த மணிமாறன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிக்கு பாசறை தொடங்குவதாக மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே திமுக வாரிசு அரசியலில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால், அதிருப்தி அடைந்த திருமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் என்னை ஏன் கட்சியில் இருந்து நீக்கினீர்கள், பின்னால் நடக்க உள்ளது தான் தற்போது நாங்கள் செய்துள்ளோம் இது கண்டிப்பாக நடக்கும் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதுரையிலிருந்து திருச்சிக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் திருமுருகன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story