கச்சத்தீவு பற்றி திமுக உண்மையைப் பேசியதில்லை: நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவு பற்றி திமுக எப்போதும் உண்மையைப் பேசியதில்லை என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தஞ்சாவூர் மேல வீதியில் மூலை அனுமார் கோயில் அருகிலிருந்து தேரடி வரை பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வாகன பேரணியில் பங்கேற்ற அவர் பேசியது: தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் மனதில் உள்ள அந்தச் சிந்தனையை நடைமுறையில் எப்படிச் செய்து காண்பிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ஊர்களுக்கும் சென்று உண்மையை எடுத்துக் கூறுகிறோம். இங்கு உண்மைக்குப் புறம்பாக நிறைய விஷயங்களை பேசுகின்றனர்.
கச்சத்தீவை மட்டுமல்லாமல், தமிழக மீனவர்கள் பரம்பரை, பரம்பரையாக மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதியையும் சேர்த்து தாரை வார்த்துக் கொடுத்தனர். அதனால், இப்போது வரைக்கும் மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த உண்மையை அனைவரும் எடுத்துப் பேசி, திமுகவை கேள்விக் கேட்க வேண்டும். இதை தற்போது மோடி மட்டும் கேட்கவில்லை. சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அக்கேள்வியை விவரமாகக் கேட்டும், அப்பவும், இப்பவும் பதில் அளிக்கப்படவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்ததை அப்போதும், இப்போதும், எப்போதும் திமுக உண்மையைப் பேசியதில்லை. அவர்கள் செய்கிற ஒவ்வொரு தமிழ் விரோத நடவடிக்கைகளுக்கும் பதில் கொடுத்ததில்லை.
அவர்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சராக உள்ளவர் ஓரிடத்தில் பேசியபோது ரூ. 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்த குடும்பம், அதை எங்கு வைக்க வேண்டும் என தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறது என பேசினார். அதற்கும் அக்குடும்பத்திலிருந்து இதுவரைக்கும் பதில் இல்லை. அந்த அமைச்சரை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனரே தவிர, நமக்கு பதில் கொடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் இல்லாவிட்டாலும், சாராயம் தண்ணீர் போல வருகிறது. இதனால், பல ஆண்கள் சாராயத்துக்கு அடிமையானதால், பல குடும்பங்கள் கெட்டுவிட்டன.
அதைச் சீர்திருத்தம் செய்ய முடியாத நிலையில், போதைப் பொருள்கள் டன் கணக்கில் கொட்டுகின்றனர். இதற்கும் அக்குடும்பத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என வெளியில் தெரிய வந்துள்ளது. அதை வைத்து திரைப்படம் எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் தமிழக முதல்வர் பதில் சொல்லவில்லை. எல்லா விஷயத்தையும் முன் வந்து பேசும் உதயநிதி ஸ்டாலின் போதைப் பொருள் பிரச்னை பற்றி பேசவில்லை.
எனவே, போதைப்பொருள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை வாக்கு மூலம் நொறுக்குவோம் என்றார் நிர்மலா சீதாராமன். இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், தமாகா செயற் குழு உறுப்பினர் என்.ஆர். நடராஜன், அமமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் வேலு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.