தோல்வியின் விளிம்பில் தி.மு.க - எல்.முருகன்

தமிழகத்தில் தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.,வினருக்கு ஆதரவாக உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் நீலகிரி தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கீழ்க்குந்தா பகுதியில் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து அவர்களது பாரம்பரிய முறைப்படி அவர்களது குலதெய்வ கோவிலில் காணிக்கை செலுத்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமரின் 10 ஆண்டு ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி வாக்கு சேகரித்தார்.

எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை தி.மு.க., அரசு வஞ்சித்து வருவதன் மூலம் தமிழக முதலமைச்சரின் போலி வேஷம் அம்பலத்துக்கு வந்து உள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. டீக்கடையில் உட்கார்ந்துக் கொண்டு நாடகம் போடும் அவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகளை நேரடியாக சென்று பார்க்க நேரம் இல்லை.

பா.ஜ.க., ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்துல் கலாமை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினோம். அவரை 2 வது முறையாக தேர்வு செய்தபோது குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கடந்த 2014ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும், 3 வது முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்முவை ஜனாதிபதியாக தேர்வு செய்து உள்ளோம்.

மத்திய அமைச்சர்கள் பட்டியலில் 27 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்கள். தி.மு.க., வினருக்கு எந்தெந்த திட்டங்களில் ஊழல் செய்யலாம் என்பது பற்றி தான் கவனம் இருக்கும். அவர்கள் தமிழை வைத்து அரசியல் லாபம் தேடிவருகின்றனர். ஆனால் உண்மையிலேயே தமிழை போற்றுவது பிரதமர் மோடி மட்டுமே. சர்வதேச அளவில் 35 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்பட்டு உள்ளது. காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை ஏற்படுத்தி கொடுத்தது பா.ஜ.க.,. காசி தமிழ் சங்கமத்தை 2 முறையும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தையும் நடத்தி காட்டி உள்ளோம். பிரதமர் மோடி இன்றைக்கு உலக நாடுகளுக்கு மத்தியில் தமிழர் பண்பாடு குறித்து பேசி வருகிறார். ஐ.நா., சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியை பதிவு செய்திருக்கிறது. தமிழகத்தில் இன்றைக்கு தி.மு.க.வினர் தோல்வியின் விளிம்பில், தோல்வி பயத்துடன் நின்றுகொண்டு உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடு தி.மு.க.,வினருக்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாவட்ட தலைவர் மோகன்ராஜ்,செயற்குழு உறுப்பினர் போஜராஜ் மற்றும் பலர் இருந்தனர். மேலும் மஞ்சூர் கீழ் குந்தா பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் எல்.முருகன் அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story