திமுக முப்பெரும் விழா - கட்சியினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு தி.மு.க.வை வழிநடத்திச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல்-அமைச்சர் தலைமையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டுகிறேன். எனவே இந்த முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.