குஷ்பு உருவ படத்தை எரித்து திமுக., மகளிரணி போராட்டம்
மகளிர் உரிமைத்தொகை தொடர்பான பேசிய குஷ்புவை கண்டித்து, அவரின் புகைப்படத்தை எரித்து விழுப்புரம் தி.மு.க., மகளிரணியினர் நுாதன போராட்டம் செய்தனர்.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதை கொச்சைபடுத்தி பேசிய பா.ஜக., தேசிய மாநில ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து தி.மு.க., மகளிரணி சார்பில் நுாதன போராட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமை தொகை வழங்குவது பற்றி, பா.ஜக., தேசிய மாநில ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இழிவாக பேசியுள்ளார். இதையொட்டி, குஷ்புவை கண்டித்து பல மாவட்டங்களில் தி.மு.க., மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது.
இதில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடிகை குஷ்பு உருவப்படத்தை வைத்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மகளிரணி பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி ரவிதுரை, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதா, தொண்டரணி அருள்மொழி முன்னிலை வகித்தனர். தலைவர் செல்வி, துணை தலைவர் சாந்தி, தொண்டரணி தலைவர் பிரான்சிஸ்கா மேரி, துணை அமைப்பாளர்கள் சுமதி, மஞ்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மகளிரணி நிர்வாகிகள் குஷ்பு உருவப்படத்தை தரையில் போட்டு, துடைப்பத்தால் அடித்து, பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.