திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி இருசக்கர வாகன பிரச்சார பேரணி

இருசக்கர வாகன பேரணி 

திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு குறித்து வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலத்தில் 2- வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து மாநில அளவிலான இருசக்கர வாகன பேரணியை கடந்த 15ஆம் தேதி திமுக இளைஞரணி தலைவரும் தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகன பிரச்சார பேரணி நேற்று முன்தினம் இரவு ஆரணி வந்தடைந்தது. ஆரணியில் நேற்று தொடங்கிய இருசக்கர வாகன பிரச்சார பேரணி போளூர், கலசப்பாக்கம், செங்கம் வழியாக நேற்று மாலை திருவண்ணாமலை வந்தடைந்தது. தி.மலை நகரில் முக்கிய வீதிகள் வழியாகவும் கலைஞர் சிலை,பெரியார் சிலை வழியாக வருகை தந்த இருசக்கர பிரச்சார பேரணி திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலை வந்தடைந்தது. பேரணியாக திருவண்ணாமலைக்கு வருகை தந்தவர்களை மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி ஆகியோர் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து கலைஞர் திடலில் நடைபெற்ற பிரச்சார விழிப்புணர்வு கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது; தமிழ்நாடு முதல்வர் ஒரு கண்ணில் ஆட்சியையும் ஒரு கண்ணில் கழகத்தையும் கட்டிக்காத்து இரு கண்ணாக தமிழகத்தையும், கழகத்தையும் காத்து வழிநடத்தி வருகிறார் என்றும் தமிழ்நாட்டு மக்கள் பணியாக இருந்தாலும் கழகப் பணியாக இருந்தாலும் இவை இரண்டுமே தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர் கழகமும், தமிழகமும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார். கழகத்தை அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த தலைமுறையின் தலைவராகவும் இளைஞர்களின் தலைவராகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், தமிழகமே பாராட்டும் அளவிற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் பணி உள்ளதாகவும் அவர் கூறினார். தாய் கழகத்திற்கு உதவியாக இளைஞர் அணிசெயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பேசியவர், சமூக நீதி, சம பொருளாதாரம், இனம் மொழி காக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி கூறியதை சுட்டிக்காட்டி பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் சர்வாதிகாரப்போக்கோடு நடந்து கொள்ளுகிறார் என்று குற்றம் சாட்டிய அவர் ஒன்றிய அரசின் ஊதுகோலாகவும், பிரதிநிதியாகவும் செயல்பட்டு வரும் ஆளுநர் தமிழ்நாடு அரசை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து கலைஞரின் பேனா என்ற தலைப்பில் மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் டி.வி.எம். நேரு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் கண்ணதாசன், ராஜசேகரன், ரமேஷ், சதீஷ், திலீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

Tags

Next Story