தி.மு.க இளைஞரணி மாநாடு - மறைமலைநகரில் ஆலோசனை

தி.மு.க இளைஞரணி மாநாடு - மறைமலைநகரில் ஆலோசனை
தி.மு.க., ஆலோசனை கூட்டம்

சேலத்தில் வரும் 24ம் தேதி தி.மு.க., இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டை ஒட்டி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆலோசனை கூட்டம், மறைமலைநகரில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சரும், தி.மு.க., காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலருமான அன்பரசன் பங்கேற்றார். அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: சேலத்தில் நடைபெறும் இரண்டாம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில், 10,000 பேரை அழைத்து வருவதாக கட்சி தலைமையிடம் தெரிவித்து உள்ளேன். மறைமலை நகர் நகராட்சியில் இருந்து, 500 பேரை அழைத்து வர வேண்டும். மாநாட்டில் பங்கேற்போருக்கு டி - சர்ட் மற்றும் பேன்ட் வழங்கப்பட்ட உள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நம் மாவட்டம் மற்ற மாவட்டங்களை விட பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்கள் தான். இளைஞர்களுக்கு நம் இயக்கத்தின் வரலாறு, சாதனை உள்ளிட்டவைகளை தெரிவிக்கவே இந்த மாநாடு நடைபெற உள்ளது.

நம் கட்சியில் துடிப்புடன் செயல்படும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், சில நிர்வாகிகள் துடிப்புடன் செயல்படும் இளைஞர்கள் நம்மை விட கட்சியில் உயர்ந்து விடுவார் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு அவர்களை காலி செய்து விடுகின்றனர். தி.மு.க.,காரர்கள் சுயமரியாதைக்காரர்கள். அவர்களுக்கு கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து கூட்டங்களுக்கும் முறையாக அழைப்பு விடுத்தால் நிச்சயம் பங்கேற்பர். ஆனால், நிர்வாகிகள் பலர் அதை செய்வது இல்லை, அதன் காரணமாக சீமான், பா.ஜ., என செல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story