கொலை வழக்கில் இறந்தவரின் டி.என்.ஏ., பரிசோதனையில் அதிர்ச்சி
வாலிபர்
சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஜிம் மாஸ்டர் சுரேஷ், 38. இவர், தன் பெயரில் 1 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்தார். இப்பணத்தை பெறுவதற்காக, தன்னைப்போல் சாயல் உள்ள, சென்னை அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த டில்லிபாபு, 39, என்பவரை, கடந்த ஆண்டு செப்., 16ல் மது குடிக்க வைத்து, நண்பர்களுடன் சேர்ந்து தீயிட்டு கொலை செய்ததாக கூறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணுாரில் இச்சம்பவம் நடந்தது. அங்குள்ள குடிசை வீட்டில்எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை, ஒரத்தி போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
தீயில் இறந்தது தன் தம்பி சுரேஷ் என்று, அவரது அக்கா மரியஜெயஸ்ரீ, 40, அடையாளம் காட்டினார். இதன் அடிப்படையில், சுரேஷ் பெயரில் இன்சூரன்ஸ் செய்த பணத்தை பெற முயற்சித்தனர். இதற்கிடையே, உண்மையில் இறந்ததாக கருதப்பட்ட டில்லிபாபுவின் தாய் லீலாவதி, தன் மகனை காணவில்லை என, ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நடவடிக்கை இல்லாததால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஆவடி போலீசார் நடத்திய விசாரணையில், வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 32, தாம்பரம் அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திராஜன், 23, ஆகியோருடன் வேலைக்கு சென்ற டில்லிபாபு, திரும்ப வராதது தெரிந்தது.
அவர்களை பிடித்து, போலீசார் விசாரித்தபோது தான், இன்சூரன்ஸ் பணத்துக்காக, சுரேஷின் சாயலில் இருந்த டில்லிபாபு கொல்லப்பட்டது தெரிந்தது. இதை ஒப்புக்கொண்டதை அடுத்து, சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் புதிதாக ஒரு திருப்பம் வந்துள்ளது. தீயிட்டு கொளுத்தப்பட்ட உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து இருந்ததால், அது டில்லிபாபு தான் என்பதை உறுதிப்படுத்த, டி.என்.ஏ., பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீயில் எரிந்து கிடந்த சடலம், ஆணின் உடையது அல்ல; அது ஒரு பெண் சடலம் என்பது தெரிந்து, போலீசார் குழம்பிப் போய் உள்ளனர்.