குடியிருப்பு, தண்ணீர் தொட்டியை சீரமைக்க டோபி காலனி மக்கள் கோரிக்கை!

டோபி காலனி மக்கள் குடியிருப்புகளை சீரமைக்கவும் தண்ணீர் தொட்டிகளை புதுப்பித்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் டோபி காலனி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் சலவை தொழில் மேற்கொள்ள குடியிருப்புடன் தண்ணீர் தொட்டிகள் அமைத்து சுமார் 400 குடும்பங்கள் பணியமர்த்தப்பட்டு சலவை தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2012 ஆண்டு வரை இந்த சலவை தொழில் எவ்வித பாதிப்புமின்றி நன்றாக செயல்பட்டுவந்தது. சமீப காலங்களில் நீர் நிலைகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களால் டோபி காலனி பகுதிக்கு வரக்கூடிய தண்ணீர் தடைபட்டு நீர் வரத்து குறைந்தது. அது மட்டுமின்றி கொரோனா காலத்தில் சலவை தொழில் முற்றிலும் நலிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்த தொழிலில் 50 முதல் 60 பேர்கள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் என்பதால் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்," குடியிருப்புக்களை சீரமைக்கவும், தண்ணீர் தொட்டிகளை புதுப்பித்து தர பல முறை குன்னூர் நகராட்சியில் புகார் அளித்தும் எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் இங்குள்ள சலவை தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகையும் கிடைப்பதில்லை. எனவே குடியிருப்புகளை சீரமைத்து , தண்ணீர் தொட்டிகளை புதுப்பித்து தர கோரி வண்ணாரப்பேட்டை டோபி காலனி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story