குமரி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ஆவணங்கள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி என்பவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை இருந்த நோயாளி பகவதியப்பன் என்பவர் தனக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற நினைப்பதுடன் அங்குள்ள சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் புகார் கூறியிருந்தார். சமூக ஊடகங்களிலும் அவரது வீடியோ வெளியாகி இருந்தது.
கல்லூரி முதல்வர் என்ற முறையில் இது தொடர்பாக நான் விசாரணை மேற்கொண்டேன். 19 - 6 - 2024 முதல் 21- 6 - 2024 வரை விசாரணை நடத்தினேன். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சம்பவத்தன்று பணியில் இருந்த டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர். இந்த விசாரணையில் மருத்துவ கல்லூரி நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் இரண்டு பெண் டாக்டர்கள் தவறு செய்தது மற்றவர்களின் வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்தது. எனவே சம்மந்தப்பட்ட இருவரை விசாரணைக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆவண காப்பக அறையை சட்ட விரோதமாக திறந்து சம்பந்தப்பட்ட நோயாளியின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு, புதிதாக பொய்யான ஆவணங்களை உருவாக்கி உள்ளனர். தங்களது பதவியை காப்பாற்றுவதற்காக துஷ்பிரயோகம் நடந்துள்ளது. இதற்கு பயிற்சி டாக்டர்களை உபயோகப்படுத்தி உள்ளனர். ஆவணங்களை மாற்றியவுடன் சிகிச்சையில் இருந்த நோயாளியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசியது மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வகையில் அமைந்துள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.