சிறுத்தை புலி நடமாட்டமா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

சிறுத்தை புலி நடமாட்டமா? வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

காருவள்ளி அருகே மர்ம விலங்கு மாட்டை கடித்து கொன்றது குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.


காருவள்ளி அருகே மர்ம விலங்கு மாட்டை கடித்து கொன்றது குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மர்ம விலங்கு விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தையை பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள காப்புக்காட்டில் வனத்துறையினர் கேமரா வைத்தும், டிரோன் கேமரா பறக்க விட்டும் கண்காணித்தனர். இதில் சிறுத்தை புலி நடமாட்டம் பதிவாகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காருவள்ளி கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் 2 மாடுகளை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார்.

காலையில் எழுந்து பார்த்தபோது ஒரு மாட்டை மர்ம விலங்கு கடித்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ், தாசில்தார் ஹாஜினா பானு, வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்திற்கான கால் தடம் பதிந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். பின்னர் மர்ம விலங்கின் கால் தடம் மற்றும் விளையாடிய இடத்தில் இருந்த ரோமங்கள் மற்றும் எச்சம் ஆகியவற்றை வனத்துறையினர் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மர்ம விலங்கு குறித்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story