வெப்ப சிதைவு இயந்திர கூடம் படப்பையில் பயன்பாட்டிற்கு வருமா?
மூடிக்கிடக்கும் கூடம்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில் படப்பை ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளொன்றுக்கு 4 டன் குப்பை சேகரமாவதால், படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றுவது பிரச்னையாக இருந்து வந்தது.
இந்நிலையில், ஒரகடத்தில் உள்ள 'ரெனால்டு நிசான்' கார் தொழிற்சாலையின் சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, 61 லட்சம் ரூபாய் மதிப்பில் காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடம், 2022ம் ஆண்டு படப்பையில் அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக படப்பை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடத்தில், எரிபொருட்கள் இல்லாமல் காந்த சக்தி மூலம் ஏற்படும் வெப்பத்தால் குப்பை கழிவுகளை சாம்பலாக்க முடியும். இந்த இயந்திரத்தில் 200 கிலோ குப்பையை உள்ளீடு செய்தால், 1 கிலோ சாம்பல் கழிவுகள் மட்டும் வெளிவரும்.
நாளொன்றுக்கு 5 டன் குப்பை வரை இந்த இயந்திரத்தில் அழிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தால், படப்பை ஊராட்சி மட்டுமின்றி, அருகில் உள்ள ஊராட்சிகளின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இந்த கூடம் பயன்படுத்தப்படாமல் மூடியே உள்ளது. படப்பை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இந்த கூடத்தின் முன் மலைபோல் கொட்டப்படுகின்றன. இவற்றில் உணவு தேடி மாடுகள், பன்றிகள் படையெடுக்கின்றன. இதனால், படப்பை - --புஷ்பகிரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடத்தை திறந்து, குப்பை கழிவுகளை முறையாக அழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்."