அரசுப் பள்ளிக்கு பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குநர்  நன்கொடை

பேராவூரணியில் அரசுப் பள்ளிக்கு பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குநர்  நன்கொடை அளித்தார்.
பேராவூரணி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குனர் ரூபாய் 10,000 நன்கொடை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பனஞ்சேரியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக வீர.சந்திரசேகரன், உதவி ஆசிரியராக க.அண்ணாராணி ஆகியோர் பணியில் உள்ளனர். பின்தங்கிய கிராமப்பகுதியான இங்கு 46 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் இப்பள்ளி மாணவர்களின் செயல் திறன் குறித்து கேட்டறிந்த, சென்னையில் வசித்து வரும் பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் முனைவர் ஏ.ஆர். சசிகலா, கடந்த மார்ச் 27ஆம் தேதி காணொலி வாயிலாக பனஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம், எண்ணும் எழுத்தும், கற்றல் திறன், காலை உணவுத்திட்டம் குறித்து பேசினார். அப்போது, பணி நிறைவு துணை இயக்குனரின் கேள்விகளுக்கு, தயக்கம் இன்றி மாணவர்கள் பதில் அளித்தனர். இவ்வாறு சுமார் 45 நிமிடம் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் ஏ.ஆர்.சசிகலா, பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் வீர.சந்திரசேகரன் கூறுகையில், "பள்ளி குறித்து இணையதளம் வாயிலாக கேள்விப்பட்ட பணி நிறைவு பெற்ற துணை இயக்குனர், எங்களது பள்ளி மாணவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். மாணவர்களுடன் உரையாடியதில், அவர்களிடம் பல கேள்விகளை கேட்டு சரியான பதில் அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த அவர் பள்ளி வளர்ச்சிக்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இதனை பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். கூடுதலாக ரூ.5000 பணம் செலவழித்து, ரூ.15 ஆயிரம் மதிப்பில் தொலைநோக்கி கருவி வாங்கி மாணவர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளோம்" என்றார். இந்தப் பள்ளியில் 13 குழந்தைகளே படித்து வந்த நிலையில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணி காரணமாக, தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story