விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்.

அரசு மரியாதை செய்த அதிகாரிகள் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அதிகாரிகள் அரசு மரியாதை செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வெள்ளிவாடி கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் பிரான்ஸிஸ் சேவியர் (வயது 45). சொந்தமாக மினி சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 28 ம்தேதி நாகம்பட்டி என்ற இடத்தில் சாலையோரம் நின்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து திருச்சி அருகே இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினர் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று அவரது உடல் மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டு உடற்கூறாய்வு நடைபெற்றது. உடல் உறுப்புகள் தானம் செய்பவருக்கு இறுதி சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) ராஜலெட்சுமி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி மற்றும் மணப்பாறை டி.எஸ்.பி., மரியமுத்து ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த பிரான்சிஸ் சேவியர் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பின்னர் உடற்கூறாய்வு முடிந்து உடல் அவரது சொந்த ஊரான டி.உடையாபட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உடன் சென்ற அதிகாரிகள் அங்கு கல்லறையில் வைக்கப்பட்ட பிரான்சிஸ் சேவியர் உடலுக்கு மலர்வளையம் வைத்தும் மாலை அணிவித்தும் அரசு மரியாதை அளித்தனர். அரசு உத்தரவின்படி உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story