திமுக வாக்குறுதியை நம்பி ஏமாந்து விடாதீர்கள்:அதிமுக வேட்பாளர் பசிலியான்
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் இன்று வாக்கு சேகரிப்பை தொடங்கினார். தொடர்ந்து நாகர்கோவில் சுற்றுவட்டார 95 இடங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அவருக்கு பொது மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பசிலியான் கூறியதாவது:- கன்னியாகுமரி பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக மக்களை நம்பி போட்டியிடுகிறேன். நான் வெற்றி பெற்றால் நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றதற்கு சமமாகும்.
சொல்வதைவிட செயலில் செய்வதை நம்புவேன். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். திமுக அறிவித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து ஏமாந்த கதை போதும். இனிமேல் ஏமாறாதீர்கள். சொல்வதை செய்கின்ற இயக்கம் அதிமுக மட்டுமே. இதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதிமுக -விற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.
தமிழ்நாட்டில் தொடங்கப்படுகின்ற திட்டங்களுக்கு குழு அமைக்கும் முதலமைச்சர் தான் நமக்கு கிடைத்துள்ளார். அந்த குழுவினால் நமக்கு எந்தவித பயனும் இல்லை. இதனை மக்களும் உணர்ந்து விட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சாரத்தில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், நாகர்கோவில் வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஸ்ரீ லிஜா உட்டட பலர் கலந்து கொண்டனர்.