குடிநீரை வீணாக்காதீர்கள்: சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்
எம்எல்ஏ ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் புனரமைப்பு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆய்வு செய்து, பொதுமக்கள் குடிநீரை வீணாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த வார்டு பகுதிகளில் சுமார் 50,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக பாலாறு ஓரிக்கை மற்றும் செவிலிமேடு பகுதிகளில் இருந்தும், திருப்பாற்கடலில் இருந்து குடிநீர் பெறப்பட்டு காஞ்சிபுரம் மாநகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்க உள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டிய நிலையில் அதற்கான புனரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பிள்ளையார் பாளையம், கிருஷ்ணன் தெரு சந்திப்பில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக வந்த புகார் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள புதிய வால்வை மாற்றி அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணியினை சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன், மேயர் மகாலட்சுமியுவராஜ் உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு விரைவாக பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஓரிக்கை பாலாறு குடிநீர் நீரேற்றம் நிலையம், பாலாற்றில் உள்ள ஆழ்துளை கிணறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில்,
தமிழக அரசு கோடை காலத்தில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகிக்கும் முறை மற்றும் அதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பொது மக்களுக்கு வேண்டுகோளாக குடிநீரை தேவை இன்றி வீணாக்காதீர்கள் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் , பொறியாளர் கணேசன் , மண்டல குழுத்தலைவர் செவிலி மேடு மோகன், மாமன்ற உறுப்பினர்கள் கயல்விழி சூசை, சரஸ்வதிபாலமுருகன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.