இளைஞர் சாதிய ஆணவக்கொலை ? - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

இளைஞர் சாதிய ஆணவக்கொலை ? - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

 தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர்

மதுரை அருகே விருதுநகரை சேர்ந்த இளைஞரை ஆணவப்படுகொலை செய்த நபர்களை கைது செய்ய கோரி அவரது குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் மகனான அழகேந்திரன் (21) இவர் படித்துமுடித்துவிட்டு வேலை தேடிவந்துள்ளார். இதனிடையே அழகேந்திரன் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அழகேந்திரன் தனது உறவினரான மதுரை கள்ளிக்குடியில் உள்ள அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் மாமன் மகன் பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் கடந்த 2 நாட்களாக புகார் அளித்த நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென கூறி காவல்துறையினர் குடும்பத்தினர் உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

இதனிடையே நேற்று காலை அழகேந்திரன் கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துசென்ற பிரபாகரனை காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே அழகேந்திரனின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகன் காதலிப்பதாக கூறிய பெண்ணின் உறவினர்கள் தனது மகனை ஆணவ படுகொலை செய்து விட்டதாக கூறியும் அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது இளைஞரின் ஆணவ படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும், ஆணவ படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வழக்கின் திசையை மாற்றும் வகையில் காவல்துறையினர் செயல்படுவதாகவும் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள்._ தனது மகனை பிரபாகரன் தனியாக அழைத்துச் சென்ற நிலையில் காலையில் கொலை செய்து விட்டதாக தகவல் வந்தது எனவும், ஆனால் காவல்துறையினர் தற்போது வரைக்கும் தனது மகனுடைய உடலை பார்க்க அனுமதிக்க வில்லை எனவும் தெரிவித்தார். தனது மகன் எப்படி இறந்தான் என்பது கூட தெரியவில்லை எனவும் ஆனால் காவல்துறையினர் கஞ்சா குடிப்பதில் இருவருக்கும் இடைநே ஏற்பட்ட மோதலால் உயிரிழந்ததாக கூறி திசை திருப்பதாலும் தனது மகனுக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் இல்லை எனவும் தெரிவித்தார் எனவே எனது மகனை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பேசிய தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பேரறிவாளன்._ இளைஞர் அழகேந்திரன் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வரும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நிலையில் அழகேந்திரனை ஆணவ படுகொலை செய்ததாக கூறி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி அழகேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story