அறுந்து கிடந்த மின் கம்பி - மின்சாரம் தாக்கி மாடுகள் பலி

அறுந்து கிடந்த மின் கம்பி - மின்சாரம் தாக்கி மாடுகள் பலி
உயிரிழந்த மாடுகள் 
மரக்காணம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து 3 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட கந்தாடு ஊராட்சியில் உள்ள பிலாரி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெய்வநாயகம் விவசாயி வயது 60. அதே பகுதியை சேர்ந்தவர் அழகேசன் வயது55. இவர்கள் தங்களது வீடுகளில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். பசு மாடுகள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் நிலை உள்ளது.

இன்று காலை வழக்கம்போல் இவர்கள் தங்களது வீட்டிலிருந்து மேய்ச்சலுக்காக மாடுகளை அருகிலுள்ள வயல்வெளிகளுக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.அப்போது அந்தப் பகுதியில் மின் கம்பி அருந்து மிகவும் தாழ்வான நிலையில் இருந்துள்ளது. எதிர்பாராத விதமாக தெய்வநாயகத்தின் இரண்டு பசு மாடுகள் மற்றும் அழகேசனுக்கு சொந்தமான ஒரு பசு மாடு அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பசு மாடுகளும் பரிதாபமாக உயிர் இழந்தது.

அப்பகுதி பொதுமக்கள் மரக்காணத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலர்களுக்கு மின்சாரத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை ,கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story