ஊரகப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் பணி - ஆட்சியர் உத்தரவு

ஊரகப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் பணி - ஆட்சியர் உத்தரவு

ஆலோசனை கூட்டம் 

தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில், தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் பணி மேற்கொள்ளுதல் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்ததாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். நடப்பாண்டில் கோடை மழை பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தற்போது எதிர்நோக்கி உள்ள தென்மேற்கு பருவமழையினால் சாலை மற்றும் தெருவீதிகளில் மழைநீர் தேங்காமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேக்கத்தால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் கழிவு நீருடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

ஆகவே, எதிர்வரும் பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட ஏதுவாக வரும் மே-31 (நாளை) முதல் தொடர்ந்து 10 நாட்கள் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை (Slit) அகற்றுவதற்கு பொக்லைன் ஜே.சி.பி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை போதுமான அளவில் ஏற்பாடு செய்து பயன்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட இயந்திரங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொள்ளலாம். வடிகால்களில் படிவுகளை அகற்றும் போது வடிகாலின் ஆரம்ப பகுதியில் (Starting point) இருந்து தொடங்கி வடிகால் இறுதி பகுதி (End point) வரை எவ்வித விடுதலுமின்றி பணியை முடிக்க வேண்டும்.

அகற்றப்பட்ட வடிகால் படிவுகளை 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கட்டாயம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் (Face Masks, Gloves, Gumboots) அணிந்து பணி செய்வதை உறுதி செய்திட வேண்டும். ஊராட்சிகளில் உள்ள சிறுபாலங்களை (Drain Culvert) கணக்கிட்டு படிவுகளை அகற்றி நீர் தடையின்றி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுபாலங்களில் மின்சார கேபிள்களில், டெலிபோன் கேபிள்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் இடையூறாக இருப்பின் அதனை மாற்றியமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பணி நடைபெறும் பகுதிகளில் குடிநீர் குழாய் கசிவு அல்லது உடைப்பு ஏதேனும் இருப்பின் உடன் சீரமைக்கப்பட வேண்டும். அதேபோல, தெருவிளக்கு ஏதேனும் எரியாமல் இருப்பின் உடன் சீரமைக்கப்பட வேண்டும். இப்பணிகளில் ஊரக வளர்ச்சி துறை, பேரூராட்சி நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்தன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story