திராவிட கட்சிகள் குடிநீர் வசதி கூட தரவில்லை: பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள். குடிநீர் வசதி கூட கிராமங்களில் ஏற்படுத்தி தரவில்லை. செந்தில்நாதன் குற்றச்சாட்டு. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செந்தில் நாதன்.
இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாடி- மருதம்பட்டி காலனி, ஏமூர் நடுப்பாளையம் காலனி, ஏ மூர் புதூர், லிங்கத்தூர், ஜோதிவடம், உப்பிடமங்கலம் 4- ரோடு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் செந்தில்நாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய வேட்பாளர் செந்தில்நாதன், கடந்த 50 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் கிராமங்களில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட ஏற்படுத்தி தரவில்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடைசி 10- நாட்களில் மக்களை சந்திக்கும் அவர்கள், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, வாக்காளர்களிடம் ஓட்டை பெறுவதற்காக, ரூபாய் ஆயிரம் கொடுத்து, ஓட்டை பெற்ற பிறகு அவர்கள் அப்பகுதியை திரும்பி கூட பார்ப்பதில்லை. பொதுமக்கள் தொடர்ந்து இதே மாதிரி ஏமாற்றப்பட்டு வருகிறார்கள், அடித்தட்டு மக்கள் எப்போதும் அடித்தட்டு மக்களாகவே இருக்க வேண்டும். ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும்.
எப்போது ரூபாய் ஆயிரம் கொடுப்பார்கள் என்று, பொதுமக்கள் ஏங்கி நிற்க கூடிய சூழலை இரண்டு கட்சிகளுமே தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் மாற்றுவதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகள் நன்றாக படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும், இந்த மண்ணுக்கு பெருமை தேடி தர வேண்டும் என்று சொன்னால் நீங்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.