தேவை அதிகரிப்பால் குடிநீர் கேன் விலை உயர்வு !
குடிநீர் கேன்
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் கேன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து மே மாதத்தில் வெயில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடுமையாக கொளுத்தும் வெயிலின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெயில் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதியில் காவிரி கரையோரம் அமைந்துள்ளதால் பள்ளிபாளையம் குமாரபாளையம் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்று நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் காரணமாக நீரின் தேவை அதிகரித்துள்ளது. பள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகளின் பொழுது சாலையில் பள்ளம் தோண்டும் பொழுது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால், பல்வேறு பகுதிகளில் முறையான குடிநீர் வழங்க முடியாத நிலை அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
மேலும் காவிரி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவு நீர் காரணமாகவும், குடிநீர் மாசடைந்து வருவதால் பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் மட்டுமே காவிரி ஆற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து உள்ள நிலையில், மின் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சினாலும், குறைவான அளவிலயே நீர் வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் கவனம் குடிநீர் கேன் பக்கம் திரும்பி உள்ளது. சராசரியாக 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குடிநீர் கேன் சாதாரணமாக உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஐந்து முதல் எட்டு கேன்கள் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீர் கேன்களை வாங்குகின்றனர். தேவை அதிகரிப்பால் குடிநீர் கேன்கள் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து குடிநீர் கேன் விற்பனை செய்யும் குமரேசன் என்பவர் கூறும் பொழுது, வருடம் முழுவதும் குடிநீர் கேன்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தும் குடும்பங்கள் ஏராளமானோர் எனக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
அவர்கள் சராசரியாக தேவையைப் பொறுத்து ஒரு மாதத்திற்கு 8 முதல் 10 குடிநீர் கேன்கள் வரை வாங்குவார்கள். ஆனால் தற்போது கொளுத்தும் கோடை வெயில் காரணமாகவும் தேவையான குடிநீர் கிடைக்காததால் தற்போது எங்களிடம் கூடுதலாக குடிநீர் கேன்களை வாங்குகின்றனர். ஆரம்பத்தில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் கேன்கள் தற்போது டிமாண்ட் காரணமாக 30 முதல் 35 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது.
எங்களுக்கு வழங்கும் நிறுவனமும் சற்று கூடுதலாக குடிநீர் கேன்களுக்கு விலையை ஏற்றியதால் நாங்களும் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் முழுவதுமே இந்த விலை ஏற்றம் இருக்கும்.திருச்செங்கோடு நாமக்கல் மோகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கூடுதல் விலைக்கு குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் இவ்வளவு பெரிய காவிரி ஆறு அருகில் இருந்துமே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு காசு கொடுத்து பொதுமக்கள் குடிநீர் கேன்களை வாங்குகிறார்கள் எனும் பொழுது, ஆறு, ஏரிகள் இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்கு என்ன செய்வார்களோ என நினைக்கும் போதே கவலையாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் பேக்கரிகளிலும் குடிநீரின் தேவை அதிகரிப்பால், சராசரியாக ஒரு நாளைக்கு 10முதல் 15 கேன் குடிநீர் வரை பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தேவை அதிகரிப்பால் 15 முதல் 22 கேன்கள் வரை தினந்தோறும் தேவைப்படுவதாக பேக்கரி கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைவதற்கு முன் தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு தமிழக முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.