குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தொ டர்ச்சியாக குடிநீர் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மஞ்சள்நீர்க்காயல் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து ஆற்றில் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படும்.

ஆனால் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தினந்தோறும் சுத்தம் செய்து, குளோரின் கலக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஆட்சியர் பேசும்போது, "மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். முறையாக குளோரின் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் தரத்தை தினமும் பரிசோதிக்க வேண்டும். இதற்காக மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். தொடர்ச்சியாக இதனை செய்து சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உலகநாதன், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story